#275 to #279

#275. அன்பு வலை

தான்ஒருகாலம் சயம்பு என்று ஏத்தினும்
வான்ஒரு காலம் வழித் துணையாய் நிற்கும்
தேன்ஒரு பால் திகழ் கொன்றை அணிசிவன்
தான்ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே.

சிவபெருமானை ஸ்வயம்பு என்று எண்ணிப் புகழ்ந்தால் அது வானத்தில் பொருந்தி வழிபடுபவருக்கு ஒரு நல்ல துணை ஆகும். தேன் போன்ற இன்மொழி பேசும் உமை அன்னையைத் தன் இடப் பக்கத்தில் கொண்டு, கொன்றை மலர்களை அணிந்த சிவன், என் அன்பு வலையில் வந்து அகப்பட்டுக் கொண்டான். இன்னதென்று கூற முடியாத வண்ணத்துடன் நின்றான்.

#276. பெருமானை அறிகிலர்

முன் படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகலிடத்தானே.

இறைவன் இந்த உலகினை முதலில் படைத்தான். உயிர்களுக்காக எல்லா இன்பங்களையும் படைத்தான். எல்லா உயிர்களுக்கும் ஒரே தலைவனாகிய அவனிடம் அன்பு செலுத்தாமல் அவனை அறியாமல் இருக்கின்றனரே! உறுதியையும், தனது அன்பினையும் படைத்த பெருமானே இந்த விரிந்து பரந்த உலகமாகவும் விளங்குகின்றான்.

#277. சிவ ஒளி

கருத்து உறு செம்பொன் செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

உள்ளத்தில் பொருந்தும் போது உருகிய செம்பொன்னைப் போல ஒளிரும் ஜோதி வடிவானவன் நம் இறைவன்.மனதில் அவனை இருத்துங்கள்; மாறாமல் வையுங்கள். அவனே நம் தலைவன் என்று போற்றிப் புகழுங்கள். அன்பு கொண்ட மனதுடன் அவனை யார் வேண்டிக் கொண்டாலும் தேவர்களின் தலைவன் ஆகிய அவன் அங்கு தன்னுடைய சிவ ஒளியைப் பெருகச் செய்வான்.

#278. அண்ணலை நாடுகிலரே!

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சையுளே வைப்பர் எந்தை பிரான் என்று
நச்சியே அண்ணலை நாடிகிலரே.

ஜீவனுடைய வினைகளுக்கு ஏற்பப் பிறப்பையும் இறப்பையும் அமைக்கிறான் ஈசன். அவன் வைத்துள்ள முறையை அறிந்த பிறகும் உலக இன்பத்தில் நாட்டம் கொள்கின்றனர். “என் தந்தையே! எம் பிரானே!” என்று அன்புடன் அவனை விரும்பி வணங்குவதில்லை. அவர்கள் செயல் எவ்வளவு அறிவின்மை!

#279. துணையாவான்

அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உள்ளான்
முன்பின் உள்ளான்; முனிவர்க்கும் பிரான் – அவன்
அன்பினுள் ஆகி அமரும் அரும் பொருள்
அன்பினுள்ளார்க்கே அணைதுணை ஆமே.

இறைவன் இருப்பது எங்கெங்கே எப்படி என்று அறிவீரா? அவன் தன்னை அறியும் அறிவு கொண்டவர்களின் தூய அன்பில் இருப்பான். தன்னிடத்தில் இருப்பது போன்றே மற்றவர்களிடத்தும் பொருந்தி நிற்பான். அவன் அன்பையே தன் உடலாகக் கொண்டவன். உலகம் தோன்றுவதற்கு முன்பே உள்ளான். உலகம் அழிந்த பின்னும் அவன் இருப்பான். ஆத்மா ஞானம் தேடுபவர்களின் தலைவன் அவனே. அன்பு பூண்டவரிடம் நிலையாகப் பொருந்தும் அரும் பொருள் அவன். அன்பின் வழியில் தன்னை நாடி வருபவர்களை அவன் உய்விப்பான்.

Leave a comment